ஆலங்குளம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது: பணம், மோட்டார் சைக்கிள் பறிமுதல்

ஆலங்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் சிறையில் இருந்து வெளியே வந்த 2 வாரத்தில் மீண்டும் கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.;

Update:2025-07-29 07:34 IST

ஆலங்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிளாட்சன் ஜோஸ் உத்தரவின்பேரில், ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது, ஆலங்குளம் அருகே புதுப்பட்டி அய்யா கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் கதிரவன் (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கதிரவன் ஏற்கெனவே சுரண்டை மற்றும் வீரகேரளம்புதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அதிசயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமி சிலைகள், உண்டியலை உடைத்து பணத்தை திருடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.5,900 மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கதிரவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்