சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: நீதிபதியிடம் கோரிக்கை வைத்த ஜெயராஜின் மகள்கள்

அப்ரூவர் ஆகக்கோரும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.;

Update:2025-07-29 05:26 IST


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்கு அழைத்துச்சென்று போலீசார் கடுமையாக தாக்கினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த இரட்டைக்கொலை குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிபார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "இந்த வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும், அரசாங்கத்திற்கும், காவல்துறைக்கும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவராக) மாற விரும்புகிறேன்," என்று கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதாக கூறுவதை ஏற்கக்கூடாது என சி.பி.ஐ. தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி முத்துக்குமரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீதர் ஆஜரானார்.

இறந்த ஜெயராஜின் மகள்கள் பெர்சிஸ், பியூலா ஆகியோரும் நேரில் ஆஜரானார்கள். அவர்கள் நீதிபதியிடம், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்தான், எங்களின் தந்தை மற்றும் சகோதரர் கடுமையாக தாக்கப்பட்டு இறந்ததற்கு காரணம். அவரது தூண்டுதலின் பேரில் தான் போலீசார் எங்கள் தந்தையையும், சகோதரரையும் கடையில் இருந்து அழைத்துச்சென்று போலீஸ் நிலையத்தில் தாக்கினர்.

இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே எங்கள் வக்கீல் மூலமாக விரிவாக மனு தாக்கல் செய்திருக்கிறோம். எனவே அப்ரூவராக மாறுவதாக கூறும் ஸ்ரீதரின் மனுவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த கோர்ட்டும் அதே முடிவை எடுத்து அவரது மனுவை நிராகரிக்கும் என நம்புகிறோம்" என்றனர்.

பின்னர் நீதிபதி, பொதுவாக ஒரு வழக்கு விசாரணை என்பது சாட்சியம் போதுமானதாக இல்லாத பட்சத்தில் குறிப்பிட்ட நபர்கள் அப்ரூவர் ஆவது ஏற்கப்படும்.

இந்த வழக்கின் விசாரணையில் எந்த இடத்தில் சி.பி.ஐ.யின் சாட்சியம் மிகவும் தொய்வாக இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்? எதற்காக அப்ரூவராக மாற நினைக்கிறீர்கள்? என்பது உள்ளிட்ட விவரங்களை பிரமாண வாக்குமூலமாக இந்த கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வருகிற 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்