விஜய் கூட்டணியில் ஓபிஎஸ்..? 2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி - பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி

விஜய் - ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும் என்றும் தென்மாவட்டங்களில் அதுதான் பலம் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.;

Update:2025-07-27 12:43 IST

சென்னை,

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்தார். மேலும் ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தூத்துக்குடியில் நடந்த இந்த விழா முடிந்த பிறகு பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டு சென்று அங்கு இரவில் தங்கினார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்தார்.

இந்த விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். முன்னதாக நேற்று இரவு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வந்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் சந்தித்தனர்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடையே முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், "எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை- போடிநாயக்கனூர் ரெயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்" என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரதமர் மோடியை சந்திக்க ஓ,பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கவில்லை. ஓபிஎஸ் கடிதம் எழுதியும் பிரதமர் அவரை சந்திக்காமல் தவிர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஏற்கெனவே அமித்ஷா 2 முறை தமிழகம் வந்தபோதும் அவரை சந்திக்க ஓபிஎஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை அவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதேபோல் இதனுடன் சேர்த்து பிரதமர் மோடி 2 முறை தமிழகம் வந்தபோதும் ஓபிஎஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தந்தி டிவியின் கேள்விக்கென்ன நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேற வேண்டும். ஓ.பி.எஸ்-சை பாஜக புறக்கணிக்கிறது. அதை அவர் வரப்பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாஜகவை வளர்க்கக் கூடிய எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது.

அந்த கூட்டணியில் ஓ.பி.எஸ்-க்கு நன்மை இல்லை.. 'மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன்' என கும்பிடு போட்டு வெளியே வருவதே நிம்மதி. தேசிய ஜனநாயக கூட்டணியே (என்.டி.ஏ.) ஒரு ஆபத்தான கூட்டணி.

விஜய் - ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும், தென்மாவட்டங்களில் அதுதான் பலம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்