ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்ட பேரரசர் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டு உள்ளது.;

Update:2025-07-27 14:59 IST

தஞ்சை,

ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக, திருச்சியில் இருந்து பிரதமர் மோடி தஞ்சைக்கு புறப்பட்டார். திருச்சியில் அவர் வாகன பேரணியிலும் ஈடுபட்டார். அப்போது, கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரண்டிருந்த கூட்டத்தினர் அவரை வழிநெடுகிலும் பூக்களை தூவி வரவேற்றனர்.

தஞ்சைக்கு வந்த பிரதமர் மோடி, தமிழக முறையிலான பாரம்பரிய உடை அணிந்து காணப்பட்டார். அவர், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தும், தோளில் அங்கவஸ்திரமும் அணிந்து காணப்பட்டார். கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இறை வணக்கம் செலுத்தியதுடன், ஆடி திருவாதிரையை முன்னிட்டு, தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில், ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அவர், ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார். பட்டப்பெயர்கள், துணை பெயர்களை வைத்து நாணயங்களை வெளியிட்டவர் ராஜேந்திர சோழன். அதிக தங்க நாணயங்களை வெளியிட்டவர். பல்லாயிரம் பொன் நாணயங்களை வெளியிட்ட பேரரசருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், சோழர்கள் பெருமையை பறைசாற்றும் வகையிலும், ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் ஆகியோரும், சிதம்பரம் எம்.பி. திருமாவளவன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஓவியம் ஒன்றையும் பரிசளித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்