குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. குவியும் சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும்.;

Update:2025-07-27 18:38 IST

தென்காசி,

குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழியும். இதமான தென்றல் காற்று தொடர்ந்து வீசும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் சாரல் காரணமாக மரங்களும், தாவரங்களும் பசுமையாக காணப்படும்.

குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த அருவிகளில் குளிப்பதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்து இரவும் பகலுமாக குளித்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தற்போது மழை குறைந்து அருவிக்கு சீராக தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், 9 நாட்களுக்கு பிறகு பிரதான அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவியத் தொடங்கினர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்