அரசு பஸ்-பைக் நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; 2 பேர் காயம்
குழித்துறையில் நடைபெற்று வரும் வாவுபலி பொருட்காட்சியை பார்க்க நண்பர்கள் 4 பேரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர்.;
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அப்சல் (வயது 17), அஜ்மல்(16), நாசில்(15), அஜித்(17). இவர்களில் அஜ்மல் பிளஸ் 2, நாசில் பிளஸ் 1 படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில், குழித்துறையில் நடைபெற்று வரும் வாவுபலி பொருட்காட்சியை பார்க்க நேற்று மாலை நண்பர்கள் 4 பேரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். பைக்கை அப்சல் ஓட்டிச் சென்றார்.
மார்த்தாண்டம் அருகே கல்லுத்தொட்டி பகுதியை சென்றடைந்த போது சாலையில் எதிரே வந்த அரசு பஸ்சும், பைக்கும் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அப்சல், அஜித் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.