சர்வதேச சதுப்பு நில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்: கோடை இயற்கை முகாம்
கோடை இயற்கை முகாமில் இயற்கையாக வளர்ந்த மாங்குரோவ் பகுதிகளை பார்வையிட்ட மணவர்களுக்கு மாங்குரோவ்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிரினங்கள் பற்றி விளக்கப்பட்டது.;
சர்வதேச சதுப்பு நில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு தூத்துக்குடி வனக்கோட்டத்திற்குட்பட்ட பழையகாயல் கிராமத்தில் கோடை இயற்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் இருந்து 120 மாணவர்கள் பங்கேற்றனர். இயற்கையாக வளர்ந்த மாங்குரோவ் பகுதிகளை பார்வையிட்ட அவர்களுக்கு, மாங்குரோவ்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிரினங்கள் பற்றி விளக்கப்பட்டது. மேலும் மீன் முள் வடிவத்தில் தற்போது மாங்குரோவ் காடுகளை நடவுப்பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
முதன்மை கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள், சூழல் ஒருங்கிணைப்பாளர், கிராம மாங்குரோவ் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் இணைந்து மாங்குரோவ் காடுகள் நடவுப்பணிகள் மேற்கொண்டனர். இந்திய வன நிலை அறிக்கை (IFSR) 2023 ஏற்படுத்திய வனக்கண்காணிப்பு மையத்தின் (Forest Survey of India) அறிக்கையின்படி தூத்துக்குடி வனக்கோட்டத்தில் 321 ஹெக்டேர் பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பல்லுயிர்ப் பரவல் மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் 200 ஹெக்டேர் பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் நடவுப்பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டு (2025-26) திட்டத்தின் கீழ் மேலும் 200 ஹெக்டேர் பரப்பளவில் மாங்குரோவ் நிலப்பரப்புகளை மீளமைக்கும் பணியானது தூத்துக்குடி வனக்கோட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.