வவ்வால்களை வேட்டையாடி சில்லி சிக்கன் என கூறி விற்பனை - 2 பேரை கைது செய்த வனத்துறை

வேட்டையாடிய வவ்வால்களை சமைத்து, மாலை நேர சிற்றுண்டியாக சில்லி சிக்கன் என கூறி விற்பனை செய்துள்ளனர்.;

Update:2025-07-27 19:47 IST

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக டேனிஷ்பேட்டை வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனச்சரகர் விமல்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த கமல் மற்றும் செல்வம் என்பதும், அவர்கள் பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, அவற்றை சமைத்து, மாலை நேர சிற்றுண்டியாக சில்லி சிக்கன் என கூறி விற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஓமலூர் அருகே உள்ள பன்னப்பட்டி ஊராட்சி வவ்வால்தோப்பு பகுதியில், ஒரு மரத்தில் லட்சக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருவதாகவும், அவற்றை வேட்டையாட முயன்றபோது, வவ்வால்களை தெய்வமாக கருதி வணங்கி வரும் அப்பகுதி மக்கள் வவ்வால்களை கொல்ல அனுமதிக்கவில்லை என்பதால் வனப்பகுதிக்குள் புகுந்து வவ்வால்களை வேட்டையாடியதாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்