முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளை தொடர முதல்-அமைச்சரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.;

Update:2025-07-27 18:19 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந்தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவாறே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில், முதல்-அமைச்சருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார் என்றும், அவர் இன்று மாலை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "அப்பல்லோ மருத்துவமனையில்(கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்-அமைச்சர், இன்று மாலை வீடு திரும்ப உள்ளார். முதல்-அமைச்சர் நலமாக இருக்கிறார். 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிகிச்சை முடிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 6 நாட்களுக்கு பிறகு இன்று வீடு திரும்புகிறார். மருத்துவமனையில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சரை வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்