"நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்" ஆகஸ்ட் 2ம் தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார் - அமைச்சர் தகவல்
இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரால், "நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்" வருகின்ற 02.08.2025 அன்று காலை 10 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று (27.07.2025) இப்பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு களஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
"நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்"
மக்கள் நல்வாழ்வு துறையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாகவும் சிறப்பாகவும் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களை தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என்று மிகப்பெரிய அளவிலான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, மிகச் சிறந்த திட்டம் ஒன்று 02.08.2025 அன்று செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. இந்த திட்டத்தின் பெயர் "நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்" ஆகும். தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களும் நலம் காக்கும் திட்டங்களாக இருந்தாலும் கூட இந்த திட்டம் என்பது மக்களை மிகப்பெரிய அளவில் கவறும் என்கின்ற வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலனை பாதுகாத்திடும் வகையில் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை அவ்வபோது பரிசோதித்து வருகின்றனர். ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தில் தொற்றா நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்படுவதன் மூலம் உலக அளவில் தமிழ்நாடு கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக ஐநா சபையின் விருதும் கூட தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. (United Nation Interagency Task Force Award 2024) என்கின்ற விருது மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்திற்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இன்னுமொரு கூடுதல் செய்தி, இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 எனும் திட்டம் இன்றைக்கு இந்தியாவிற்கு வழிகாட்டியாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தை முன்னோடியாக கொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இப்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் திட்டங்களாக நமது துறையில் செயல்படுத்தப் வருகிறது. அந்த வகையில் "நலம் காக்கும் ஸ்டாலின்" எனும் திட்டம் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கின்ற வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
முழு உடற் பரிசோதனை செய்து கொள்வது என்பது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ரூ.15,000/- வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் கூட ரூ.4,000/-வரை செலவாகும். முழு உடற் பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த வகையில் தமிழ்நாடு
முத;ல்-அமைச்சர் மக்களை தேடிச் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் இந்த மகத்தான திட்டத்திற்கு நலம் காக்கும் ஸ்டாலின் எனும் பெயரினை வைத்து இந்தத் திட்டத்தை வருகின்ற 02.08.2025 அன்று இந்த இடத்தில் திறந்து வைக்க உள்ளார்கள். இந்த திட்டத்தை பொறுத்தவரை பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை,எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெறவிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் சான்று
இவைகள் மட்டுமல்லாமல் கூடுதல் சிறப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான மாற்றுத்திறன் சக்தியை கண்டறிந்து சான்றிதழ் பெறுவது என்பது அவசியமான ஒன்றாகும். ஏற்கனவே மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் MGR நகர் பகுதியில் ஒரு அலுவலகம் இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் அந்த ஒரு இடத்திற்கு வந்து அவர்களுடைய மாற்றுத்திறன் சக்தியை கணக்கிட்டு சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழ் பெறப்பட்ட பிறகு தான் அரசின் நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடையும்.
இந்தத் திட்டத்தை எளிமைப்படுத்திடும் வகையில் தற்போது தொடங்கப்படவிருக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற இந்த முகாம்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இங்கேயே பரிசோதிக்கப்படுகிறார்கள். இந்த முகாம்களில் மருத்துவர்கள் இருப்பார்கள். எத்தனை சதவீதம் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அங்கேயே அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்
அதேபோல் காப்பீட்டு திட்டத்தை பொறுத்தவரை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 1.5 கோடி குடும்பங்கள் அதன் மூலம் தமிழ்நாட்டில் பயன் பெற்று வருகிறார்கள். இருந்தாலும் அந்தத் திட்டத்தில் புதிய பயனாளர்களை சென்றடையும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகத்தில் ஏற்பாடுகள் இருக்கிறது.
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு போன்ற ஆகிய இரண்டு இடங்களிலும் காப்பீடு திட்டத்திற்கு இணைவதற்குரிய அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது, என்றாலும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டத்தின் மூலம் நடைபெறும் முகாம்களில் புதிய காப்பீடு திட்டத்திற்கு இணைவதற்குரிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
புற்றுநோய் பாதிப்பு கண்டறியும் முகாம்
அதோடு மட்டுமல்லாமல் இன்றைக்கு உலகிலேயே அச்சுறுத்தி வரும் பெரிய நோய் பாதிப்பு புற்றுநோய் பாதிப்பு ஆகும். எனவே புற்றுநோய் பாதிப்புகளை இங்கேயே கண்டறிந்து, கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்று பல்வேறு வகைகளிலான ஆண், பெண் என்று இரு பாலருக்குமான புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிகின்ற பணிகளும் இந்த முகாம்களில் நடத்தப்படவிருக்கிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் அடங்கிய இந்த முகாம்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 388 ஒன்றியங்களில், அதாவது ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 என்கின்ற வகையில் 1,164 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. சென்னைக்கு அடுத்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 வீதம் 20 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 வீதம் 57 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. ஆக மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படும்.
ஓராண்டு காலத்திற்கு பொதுமக்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த முகாம்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் அவர்களிடத்திலேயே வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் மேல் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் இந்த ஆவணங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பெறும். இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும்.
காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். பெருநகர சென்னை மாநகராட்சி பொருத்தவரை இந்த முகாம் நடைபெறுவதற்கு முன்பாகவே பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் தெரிவிக்கப்படும். இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர்(பொ) தேரணிராஜன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை கூடுதல் இயக்குநர் சம்பத் மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.