திருச்செந்தூர் கோவில் திரிசுதந்திரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

திருச்செந்தூர் கோவிலில் திரிசுதந்திரர் ஒருவர் முறைகேடாக பணம் பெற்று, சண்முகவிலாச துலாபாரம் காணிக்கை வழங்கும் வழியில் 5 பேரை அழைத்து வந்து முதியோர்முறை வரிசைக்குள் முறைகேடாக அனுப்பியுள்ளார்.;

Update:2025-07-27 18:05 IST

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 24-ம் தேதி ஆடி அமாவாசை தினத்தில் காலை 10 மணியளவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை பயன்படுத்தி திரிசுதந்திரரான பாபு நாராயணன் என்பவர் முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு சண்முகவிலாச துலாபாரம் காணிக்கை வழங்கும் வழியில் 5 நபர்களை அழைத்து வந்து முதியோர் முறை வரிசைக்குள் முறைகேடாக அனுப்பியுள்ளார்.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது தக்கார் தீர்மானத்தின்படி திரிசுதந்திரர் பாபு நாராயணன் மீது வரப்பெற்ற புகார் குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதால் மறு உத்தரவு வரப்பெறும் வரை இக்கோவிலின் எவ்வித பூஜை கைங்கரியங்கள் மற்றும் உதவி கைங்கர்யங்கள் செய்வதற்கு அவருக்கு தடை விதிக்கப்படுகிறது. ஒரு வார காலத்திற்குள் அவர் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே போல இக்கோவிலில் தரிசனத்துக்கு பணம் அவசியம் என்ற ரீதியில் முத்துசெல்வன் என்பவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதன்பேரில், திருச்செந்தூரைச் சேர்ந்த சுந்தரம் மகன் பாலசுப்பிரமணியம் என்ற திரிசுதந்திரர் மீதான புகார் குறித்து விசாரிக்கப்பட்டது. அவர் கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவருக்கும் மறு உத்தரவு வரை பூஜை கைங்கர்யம் மற்றும் உதவி கைங்கர்யம் செய்வதற்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்