ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 88 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.;
தர்மபுரி,
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பியதால், அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இன்று மதியம் வினாடிக்கு 78 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து, தற்போது 88 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.