பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் 30 பேர் மீது வழக்குப்பதிவு
பிரதமர் மோடி வருகைக்கு எதிராக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.;
தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை, குறிப்பாக கல்விக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். எனவே பிரதமர் மோடி, எந்தெந்த மாவட்டங்களுக்கு செல்கிறாரோ, அந்தப் பகுதியில் உள்ள மாவட்ட தலைவர்கள் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. அறிவித்தார்.
அதன்படி தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடியை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடியை கையில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் சண்முகம், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா, ராஜன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் மாரிகுமார் உட்பட 30 பேரை தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் பிரதமர் மோடி வருவதை எதிர்த்து கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து களங்கம் ஏற்படும் வகையில் ஒன்று கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உட்பட 30 பேர் மீது 189(2) 126(2) ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.