அப்துல் கலாம் நினைவு தினம்: நமது தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பு முன்மாதிரியானது - பிரதமர் மோடி புகழாரம்
இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அப்துல் கலாம், மிகப்பெரிய கனவுகளை காண வேண்டும் என மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.;
சென்னை,
தமிழகத்தின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தவர், டாக்டர் அப்துல் கலாம். இந்தியாவின் 'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்படும் அப்துல் கலாம், இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ.வில் பணியாற்றி, பல்வேறு முக்கிய ஏவுகணை திட்டங்களுக்கு தலைமை தாங்கினார். பொக்ரான் அணுகுண்டு சோதனையில் தொழில்நுட்ப ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அப்துல் கலாம் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானது.
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்ற அப்துல் கலாம், கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி, ஜைனுலாப்தீன் மற்றும் ஆசியம்மா தம்பதியின் 5-வது மகனாக பிறந்தார். சிறுவயது முதலே விமானங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அப்துல் கலாம், மிகப்பெரிய கனவுகளை காண வேண்டும் என மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய ஆளும் பா.ஜ.க. அரசு மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு, இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதிவியேற்ற பிறகும், பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திப்பதையும், அவர்களுடன் கலந்துரையாடுவதையும் அப்துல் கலாம் வழக்கமாக கொண்டிருந்தார்.
2015-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல் கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடல் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவை போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்தநிலையில் அப்துல் கலாமின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
நமது அன்புக்குரிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறோம்.அவர் ஒரு எழுச்சியூட்டும் தொலைநோக்கு பார்வை கொண்டவர், சிறந்த விஞ்ஞானி, வழிகாட்டி மற்றும் ஒரு சிறந்த தேசபக்தர் என்று நினைவுகூரப்படுகிறார்.நமது தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பு முன்மாதிரியானது. அவரது எண்ணங்கள் இந்திய இளைஞர்களை வளர்ந்த மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்க பங்களிக்க ஊக்குவிக்கின்றன.என அதில் பதிவிட்டுள்ளார்.