மக்களை ஏமாற்றவே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தூத்துக்குடியில் நேற்று விரிவாக்கப்பட்ட விமான நிலையம் திறப்பு உள்ளிட்ட திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையான தினம் இன்று. தூத்துக்குடியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ரூ.4,900 கோடி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வ.உ.சி, பாரதியார் போன்றோர் விண்ணில் இருந்து வாழ்த்திக் கொண்டு இருப்பார்கள்.
தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று பா.ஜ.க. நிதி கொடுக்கவில்லை என்று சொல்வோம் என்கின்றனர். ஆனால் பா.ஜ.க. ரூ.4,900 கோடி கொடுத்துள்ளது. இதுகுறித்து தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று சொல்ல வேண்டும். 'உங்களுடன் ஸ்டாலின்' என்று 4 ஆண்டுகளாக செய்ய முடியாததை 45 நாட்களுக்குள் எப்படி செய்ய முடியும்? மக்களுக்கான மனுக்களுக்கு அவ்வப்போது தீர்வு கண்டு இருக்க வேண்டும்.
தமிழக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். மக்களை அப்பட்டமாக ஏமாற்றுவதுதான் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம். கடமை தவறியவர்கள் நீங்கள். இன்னும் 45 நாட்களில் உங்களால் எதுவும் செய்ய முடியாது. அதனை 2026-ல் நீங்கள் காண்பீர்கள்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நேர்மையாக உள்ள அதிகாரிகள் அனைவரும் குறிவைக்கப்படுகின்றனர். இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறைத்தான் முதல் இடத்தில் இருக்கிறது என்கிறீர்கள். பிறகு முதல்-அமைச்சர் ஏன் அங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.