மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கரையோரங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து. கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி மாலையில், தனது உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக நிரம்பியது. அணை வரலாற்றில் 94-வது ஆண்டாகவும் நிரம்பியது.
அதன்பிறகு மீண்டும் கடந்த 5-ந்தேதி, 20-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால், அணையின் அதிகபட்ச உயரமான 120 அடியை நீர்மட்டம் எட்டியது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வெளியேற்றப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 45,000 கன அடியில் இருந்து 60,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது.
இன்று காலை 10 மணியளவில் நீர் வெளியேற்றம் 60,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளனர்.
இதனால், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.