சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மண்டல பொறுப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.;

Update:2025-07-27 09:51 IST


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந்தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு தலைசுற்றலுக்கான காரணம் தொடர்பாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் சிகிச்சையில் இருந்தபோதிலும், ஆஸ்பத்திரியில் இருந்தவாறே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டார். இதற்கிடையில், முதல்-அமைச்சருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.முதல்-அமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், அவர் தனது வழக்கமான பணிகளை 2 நாட்களில் மேற்கொள்வார் என்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

அனைத்து பரிசோதனைகளும், சிகிச்சைகளும் நிறைவடைந்த நிலையில் அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும், பூரண குணமடைந்துவிட்டார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் 5-வது நாளான நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்-அமைச்சரை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர். 6வது நாளான நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறைபாடுகள் ஏற்பட்ட வாக்குச்சாவடிகளில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த ஆலோசனையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர். தூத்துக்குடி விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. ஆகியோர் பங்கேற்க சென்றதால் அவர்கள் 2 பேரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதனிடையே டாக்டர்கள் அறிவுறுத்தியதன்பேரில் முதல்-அமைச்சர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வந்தார். மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இன்றுடன் 7வது நாளாக முதல்-அமைச்சருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுகிழமை) மாலை சிகிச்சை முடிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்