சட்டவிரோத கட்டுமானங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சட்டவிரோத அல்லது அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை ஊக்குவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து உள்ளது.;

Update:2025-07-27 02:14 IST

கோப்புப்படம் 

மதுரை வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகணேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள கட்டிடத்தை அகற்றும் நடவடிக்கை சம்பந்தமாக பேரூராட்சி செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அந்த கட்டிடத்துக்கு அங்கீகாரம் பெறுவது சம்பந்தமாக ஏற்கனவே நாங்கள் விண்ணப்பித்து இருக்கிறோம். அதனை பரிசீலிக்காமல் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம். எனவே அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, மனுதாரர் கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் விதிமீறல் இருந்தது தெரியவந்தது. அதன்பேரில் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் அந்த கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தற்போதைய வழக்கு நிலுவையில் இருப்பதால் மேல்நடவடிக்கை நிலுவையில் உள்ளது.

மேலும், அங்கீகாரம் பெறாத கட்டிடங்களை முறைப்படுத்த சட்டம் அனுமதிக்கவில்லை. அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளன. இந்த வழக்கில் ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவால் மனுதாரர் கட்டிடத்தின் மீது எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது என வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சட்டவிரோத அல்லது அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை ஊக்குவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன்பாகவே சட்டப்படி உரிய அனுமதியை பெற வேண்டும். அனுமதி வழங்கிய அதிகாரிகள், முறையாக கட்டுமானம் நடக்கிறதா? என ஆய்வு நடத்த வேண்டும். ஏதேனும் விதிமீறல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டம் 1971-ன் பிரிவு 54, விதிமீறல் கட்டுமானங்களின் அனுமதியை ரத்து செய்ய அதிகாரம் வழங்குகிறது. அதே சட்டத்தின் பிரிவு 56, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை இடிக்க அதிகாரம் அளிக்கிறது.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் தனது கட்டிடத்தின் அனுமதியை மறுவரையறை செய்ய விண்ணப்பித்து உள்ளார். இந்த மனு நிலுவையில் இருப்பது, அந்த கட்டிடத்தின் மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு எந்த வகையிலும் தடையாக இருக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்