மதுபோதையில் கொடூர தாக்குதல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.;

Update:2025-07-26 08:23 IST


சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜாராமன் (வயது 54). இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ராஜாராமன் வார விடுமுறை அன்று நண்பர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் ராஜாராமன் கடந்த 18-ம் தேதி இரவு 8 மணியளவில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 'வீடியோ கேம்' விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரும், அவருடன் வந்திருந்த ராக்கி, அய்யப்பன் ஆகியோரும் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

'வீடியோ கேம்' விளையாடி விட்டு ராஜாராமன் கிளம்ப தயாரான நேரத்தில் அவருடன் ராக்கி, அய்யப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்து ராஜாராமன் மயங்கினார்.

சுய நினைவு இல்லாமல் கிடந்த அவர் மீட்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜாராமன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து எழும்பூர் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் உயிரிழந்த நிலையில் தப்பியோடிய நண்பர்கள் ராக்கி, அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்