பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு?
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.;
சென்னை,
2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இந்த விழா முடிந்த பிறகு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி செல்கிறார். இரவு 10.30 மணி அளவில் திருச்சிக்கு வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பிறகு பிரதமர் மோடி கார் மூலம் சென்று திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டு பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து மதியம் 1.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். பிற்பகல் 2.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி, திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருச்சியில் இன்று இரவு 10:45 மணிக்கு திருச்சி சுற்றுலா மாளிகையில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, ஆகியோர் உடன் செல்வார்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் பற்றி பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி விரிவாக எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்துக்கு தமிழக மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து இருப்பதையும் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார் என்கிறார்கள். பிரதமர் மோடியிடம் தமிழகத்துக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அட எடப்பாடி பழனிசாமி கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 200 பேர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.