அதிமுக-பாஜக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் - சுதாகர் ரெட்டி
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.;
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று வந்தார். அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இந்திய வரலாற்றில் நெடுநாட்கள் பிரதமர் பதவி வகித்த இந்திரா காந்தியின் சாதனையை தாண்டி பிரதமர் மோடி இந்திய மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். 4077 நாட்களாக பாரத பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார். தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து ஆதிக்கத்தால் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாக தான் உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அதை சரி செய்யும். எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் எழுச்சி பயணத்திற்கு பிரதமர் மோடியின் ஆசியும் வாழ்த்துகளும் எப்போதும் உள்ளது. தமிழக மக்களும் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக-பாஜக கூட்டணியின் தமிழக தலைவர். எங்கள் கூட்டணி குறித்து பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து பார்க்காதீர்கள். அதிமுக-பாஜக கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் 2026-ம் ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை தேசிய ஜனநாயக. கூட்டணி பெற்று நிச்சயம் வெற்றி பெறுவோம். ஓ.பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றி கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.