சென்னை விமான நிலையத்தில் ரூ.1.05 கோடி மதிப்பிலான தங்கம், கஞ்சா பறிமுதல் - 2 பயணிகள் கைது
சிங்கப்பூர் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.;
சென்னை,
சென்னை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சிங்கப்பூர் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது ஆண் பயணி ஒருவர் தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பிய வாலிபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட சோதனையின்போது, அவரது உடைமைகளில் 400 கிராம் உயர்ரக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் சுமார் ரூ.1.05 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் 2 பயணிகளை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.