'மாமன்னன் ராஜேந்திர சோழனை கவுரவிப்பது எங்கள் பாக்கியம்' - பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.;

Update:2025-07-26 19:46 IST

சென்னை,

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு தூத்துக்குடி வருகிறார். அங்கு ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இந்த விழா முடிந்த பிறகு தனிவிமானம் மூலம் இரவு 10.30 மணி அளவில் பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு பிரகதீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டு பேசுகிறார்.

இந்த நிலையில், 'மாமன்னன் ராஜேந்திர சோழனை கவுரவிப்பது எங்கள் பாக்கியம்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"இன்று மாலையும் நாளையும், தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நான் தூத்துக்குடிக்கு செல்வேன். அங்கு பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். இதில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடமும் அடங்கும். இது குறிப்பாக தமிழ்நாட்டின் தென் பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்பில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். தொடங்கி வைக்கப்படும் பிற திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை -36-ன் 50 கி.மீ தூரத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவில் 4-வழிப்பாதை, 5.16 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-138 தூத்துக்குடி துறைமுகச் சாலையின் 6-வழிப்பாதை ஆகியவையும் அடங்கும்.

துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வஉசி துறைமுகத்தின் வடக்குப் பகுதி சரக்குக் கப்பல் நிறுத்துமிடம் - III தொடங்கிவைக்கப்படும். போக்குவரத்து இணைப்பு, நிலைத்தன்மை மற்றும் போக்குவரத்தை எளிதாக்கும் மூன்று ரயில்வே திட்டங்களும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். மேலும், கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 3 மற்றும் 4-ல் இருந்து மின்சாரத்தை வெளியே அனுப்புவதற்கான மிகப்பெரிய மின் பரிமாற்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். இது தமிழ்நாட்டில் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை, ஜூலை 27 அன்று வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்