த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு; 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பிய மதுரை காவல்துறை

மாநாடு நடத்த அனுமதி கேட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் மனு அளித்தார்.;

Update:2025-07-17 17:31 IST

மதுரை,

தமிழக வெற்றிக்கழகத்தை கடந்த ஆண்டு விஜய் தொடங்கினார். அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடந்தது. தொடர்ந்து த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டை, மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்டு 25-ந்தேதியன்று மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

இதையொட்டி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. மாநாட்டு திடல் 506 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. பிரமாண்டமாக மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் மாநாட்டுக்கு அனுமதியும், பாதுகாப்பும் கேட்டும், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மனு அளித்தார்.

இந்த நிலையில், போக்குவரத்து சிக்கல்கள், விஜய் பயணிக்கும் வழிகள் என்ன?, மாநாட்டு இடத்தை தொண்டர்கள் அணுகுவது எவ்வாறு?, யார் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது? எத்தனை தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்? என்பன உள்ளிட்ட சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர். இந்த கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்களின் அடிப்படையில் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்