மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமீன்

மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.;

Update:2025-07-17 21:31 IST

சென்னை,

சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மதுரை ஆதீனம் கடந்த மே 2-ந்தேதி காரில் சென்றபோது, உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் லேசாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், 'என்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது. இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம். என் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்து, தாடி வைத்திருந்தனர்' என்று கூறினார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சைபர் கிரைம் போலீசில் வக்கீல் ராஜேந்திரன் என்பவர் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்