திருப்பத்தூர்: தண்டவாளத்தில் சிமெண்டு கல் வைத்த வாலிபர் கைது

தண்டவாளத்தில் சிமெண்டு கல்லை வைத்துவிட்டு, ரெயில் வருகைக்காக காத்திருந்துள்ளார்.;

Update:2025-07-18 01:19 IST

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் -பச்சகுப்பம் ரெயில் நிலையங்களுக்கிடையே வாலிபர் ஒருவர் தண்டவாளப் பகுதியில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தார். சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வரும் மார்க்கத்தில் ரெயில் தண்டவாளத்தில் சிமெண்டு கல் ஒன்றை தண்டவாளத்தில் வைத்து ரெயில் வருகைக்காக காத்திருந்தார். இதைக் கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆம்பூர் ரெயில் நிலைய அதிகாரி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் கூறினார். அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த வாலிபரை பிடித்தனர். முன்னதாக ஆம்பூர் ரெயில் நிலைய ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்த சிமெண்டு கல்லை அப்புறப்படுத்தினர்.

பின்னர் வாலிபரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பெரிய தாட்டான்குளம் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் சிவக்குமார் (வயது 23) என்பதும் இவரது பெற்றோர்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்ததும் தெரிய வந்தது.

மேலும் சிவக்குமார் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் போன்றவற்றை சேகரித்து கடையில் விற்று வந்துள்ளார். நேற்று காலை ரெயில் தண்டவாளத்தில் இருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் போது தண்டவாளத்தின் அருகே சிமெண்டு சிலாப் இருந்ததால் அதில் இருக்கும் கம்பியை எடுக்க தண்டவாளத்தில் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்