லோடு வேன் கழிவுநீர் கால்வாயில் பாய்ந்து விபத்து: வியாபாரி உள்பட 2 பேர் காயம்
புதூர்பாண்டியாபுரம் பகுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஒரு லோடு வேன் கிரானைட் கற்கள், டைல்ஸ் ஏற்றிக் கொண்டு வந்தது.;
தூத்துக்குடி, கே.வி.கே.நகரை சேர்ந்த பாண்டி, வியாபாரி. இவர் தூத்துக்குடி 4-ம் கேட் அருகே சாலையோரத்தில் மீன்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கடையை திறந்து மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது புதூர்பாண்டியாபுரம் பகுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஒரு லோடு வேன் கிரானைட் கற்கள், டைல்ஸ் ஏற்றிக் கொண்டு வந்தது.
இந்த லோடு வேன் 4-ம் கேட் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலதுபுறமாக திரும்பி வேகமாக சென்றது. சிறிது தூரத்தில் சாலையோரத்தில் இருந்த மீன்கடையை இடித்து தள்ளி சென்றது. இதில் அந்த கடை சேதமடைந்தது. தொடர்ந்து ஓடிய லோடு வேன், சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் பாய்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லோடு வேன் மோதியதில் மீன் வியாபாரி பாண்டி மற்றும் அவருடன் பேசிக் கொண்டிருந்த உறவுக்கார பெண் ஒருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர். அதே நேரத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்கும் சேதம் அடைந்தது. வேன் டிரைவர் காயமின்றி தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.