பலாத்காரம் செய்யப்பட்ட 100 பெண்களை கொன்று கோவில் நிலத்தில் புதைப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்கள்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 100 பெண்களை கொன்று கோவில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.;
மங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள புகழ்பெற்ற மஞ்சுநாத சாமி கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை 4-ம் தேதி அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை முன்வைத்தார். அதில், கடந்த 1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தர்மஸ்தாலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்களின் உடல்களை ரகசியமாக புதைக்குமாறு தன்னை கோவில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கோவில் முன்னாள் ஊழியரை பெல்தங்காடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற்றனர்.
கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கடந்த 14-ந்தேதி இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். புகார்தாரரின் வக்கீல்களுடன், மங்களூரு வக்கீல்கள் சங்கத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். உள்துறை மந்திரியிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை போலீசார் தாமதப்படுத்துவதாகவும், அதனால் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண், "100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பலாத்காரம் செய்து கொன்று உடலை புதைத்ததாக கூறப்படும் வழக்கில் புகார்தாரர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் கூறும் இடத்தில் குழி தோண்டி உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி நடைபெற உள்ளது. ஒருவேளை அவர் கூறும் தகவல் உண்மைக்கு புறம்பாக இருந்தால் அவர் தலைமறைவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பிணத்தை தோண்டி எடுக்கும் பணி என்பது சாதாரண விஷயம் அல்ல. எந்த சட்ட நடைமுறைகளையும் செய்யாமல் நடவடிக்கை எடுத்துவிட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு குறித்து விசாரணை குழுவுக்கு சமீபத்தில் தகவல் வந்தது.
புகார்தாரர் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். இதுபற்றிய கோரிக்கையை கோர்ட்டில் முன்வைத்துள்ளோம். அதுமட்டுமின்றி பிணங்களை தோண்டி எடுக்கும் நாள், நேரம், சட்ட விதிகள் அனைத்தும் விசாரணை அதிகாரியால் தீர்மானிக்கப்படும். இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியின் முடிவே இறுதியானது" என்று அவர் கூறினார்.