நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-18 11:22 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் மது & போதை வணிகத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட மகிழுந்தை பறித்து, வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து செல்லும் நிலையை காவல்துறை ஏற்படுத்தி உள்ளது. நேர்மையாகவும், கடமை உணர்வுடனும் செயல்பட்டதற்காக ஒரு காவல் அதிகாரியின் மகிழுந்தை பறித்து அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட சுந்தரேசன், விதிகளை மீறி செயல்பட்டதாக இதுவரை 23 பார்களை மூடி முத்திரையிட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 1200க்கும் கூடுதலான வழக்குகளை பதிவு செய்திருக்கும் சுந்தரேசன் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறைகளிலும் அடைத்துள்ளார்.

காவல்துறை உயரதிகாரிகள், ஆளும்கட்சி நிர்வாகிகளின் பரிந்துரையையும் மீறி மது வணிகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் அதற்கு பழிவாங்கும் வகையில் தான் அவர் மீது இத்தகைய பழிவாங்கல்களை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் இந்த அத்துமீறலையும், அதை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் அனுமதிக்க முடியாது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை தலைவிரித்தாடியது. இது தொடர்பாக, காவல்துறைக்கு தகவல் கொடுத்ததற்காக, மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கடந்த பிப்ரவரி மாதம் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

சுந்தரேசன் பொறுப்பேற்ற பின்புதான் கள்ளச்சாராய வணிகமும் அரசு மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களில் சட்டவிரோத மது விற்பனையும் குறைந்திருக்கிறது.

சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுத் தரப்பில் இருந்தே அவருக்கு அழுத்தங்கள் தரப்பட்டதாகவும், அதற்குப் பணியாததால்தான் பணியில் இருக்கும் போதே அவரது மகிழுந்து பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கையூட்டு வாங்கிக் கொண்டு மது வணிகத்தை கண்டும் காணாமலும் இருக்கும்படி காவல் உயரதிகாரிகள் தமக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதை ஏற்க மறுத்ததால் தான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தூண்டுதலின் அடிப்படையில் தாம் பழிவாங்கப்படுவதாகவும் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசனே குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேர்மையாக பணியாற்றியதற்காக சுந்தரேசன் பழிவாங்கப்படுவது இது முதல் முறையல்ல. காஞ்சிபுரத்தில் பெண் காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்தும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழங்கில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் உட்பட மூவர் என்கவுண்டர் முறையில் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் மாநில மனித உரிமை ஆணையத்தின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் என்ற முறையில் விசாரணை நடத்திய சுந்தரேசன், காவல்துறையினருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார். அதை மனித உரிமை ஆணையமும் ஏற்றுக் கொண்டது.

இதனால் ஆத்திரமடைந்த அரசும், காவல்துறையும் சுந்தரேசனை கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்தன. இந்த உத்தரவை மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் மணிக்குமார், ரத்து செய்த நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை திரும்பப்பெற்று தமிழக அரசும் காவல்துறையும் அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டன. அப்போதே தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அத்துமீறல்களை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

கள்ளச்சாராய வணிகத்தையும், சட்டவிரோத மது விற்பனையையும் தடுக்கத் தவறியவர்கள் மீதுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அவற்றை தடுத்து நிறுத்திய ஓர் நேர்மையான காவல் அதிகாரி பழிவாங்கப்படுவது இதுதான் முதல் முறையாக இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? அல்லது மதுவின் ஆட்சியா? என்ற வினாதான் எழுகிறது.

இதை விட பெருங்கொடுமை என்னவென்றால், காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசனின் மகிழுந்து பறிக்கப்படவில்லை என்றும், ஏதோ முக்கிய அலுவலுக்காக அவரிடமிருந்து பறிக்கப்பட்ட வாகனம் நேற்றிரவு அவரிடம் மீண்டும் வழங்கப்பட்டு விட்டதைப் போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயன்றுள்ளது.

சுந்தரேசனின் மகிழுந்து பறிக்கப்பட்டது குறித்த செய்தி ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வெளியான பிறகு நேற்று இரவில் தான் அவரது வாகனம் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. நேர்மையான காவல் அதிகாரியை அவமதித்தது மட்டுமின்றி, அவருக்கு எதிராக காவல்துறை இழைத்த கொடுமைகளை மூடி மறைக்க காவல்துறை மறைப்பதை ஏற்க முடியாது.

காவல்துறையில் தாம் எவ்வாறு பழிவாங்கப்பட்டேன்? உளவுத்துறை மற்றும் சட்டம் & ஒழுங்குத்துறையில் உள்ள உயரதிகாரிகள் எப்படியெல்லாம் தம்மை தொடர்ந்து பழிவாங்கினார்கள் என்பது தொடர்பாக மூத்த அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு சுந்தரேசன் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படும் சுந்தரேசன் அவர் விரும்பும் இடத்தில் சுதந்திரமாக பணி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். பழிவாங்கும் நோக்குடன் அவர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை உயரதிகாரிகளை அரசு தண்டிக்க வேண்டும். சுந்தரேசன் மீது இனியும் எந்த வித பழிவாங்கல்களும் கட்டவிழ்த்து விடப்படாமல் இருப்பதை தமிழக அரசும், காவலதுறை தலைமையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்