காமராஜர் சர்ச்சை விவகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது: செல்வப்பெருந்தகை
காமராஜர் சர்ச்சை விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சாலைகளை மேம்படுத்த வேண்டும் உள்பட மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை முதல்-அமைச்சரிடம் வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினரான நானும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தோம். ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இங்கு அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. வரி செலுத்துவதில் முதன்மையான தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உள்ளது.
அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளையும் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் இருந்து மனுவாகப் பெற்று முதல்-அமைச்சரிடம் கொடுத்துள்ளோம். அதனை பரிசீலித்து ஊரகத்துறை அமைச்சருடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உறுதியளித்துள்ளார்
காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிந்துபோனது; நேற்று காலையே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் கட்சி மேல் அண்ணாமலைக்கு எவ்வளவு கவலை.டெல்லியில் காமராஜரை கொலை செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ். இதில் வேஷம் போடுகிறது.
தற்போது வாக்குகளுக்காக காமராஜருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, நினைவு நாளை அனுசரிப்பது என வேஷம் போடுகின்றனர். பாஜக, ஆர்.எஸ்.எஸ். வேஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.