கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பங்களாவை மீண்டும் ஆய்வு செய்ய கோரி மனு
இது தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது.;
நீலகிரி ,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கோடநாடு பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ் கோர்ட்டில் ஆஜரானார்.
அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகினர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் நடைபெற்ற எஸ்டேட் பங்களாவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடந்த 2023ம் ஆண்டு குற்றவாளிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10வது குற்றவாளியான ஜித்தின் ஜாய் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசு தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.