வரதட்சணை கொடுமை புகார்: காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்

வரதட்சணை கொடுமை புகாரில் காவலர் பூபாலன், அவரது தந்தை காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-07-18 20:14 IST

மதுரை,

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகள் தங்கப்பிரியா (32). பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரி. இவருக்கும், மதுரை காதக்கிணறு செந்தில்குமரன் மகன் பூபாலனுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பூபாலன் மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிகிறார்.

தங்கப்பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 7 வயதிலும், 5 வயதிலும் இரு மகன்கள் உள்ளனர். இத்தம்பதியரின் குழந்தைகளுக்கு காதணி விழாவின்போது, இருவருக்கும் தலா 5 பவுன் நகைகள் போடுமாறு தங்கப்பிரியாவின் பெற்றோரிடம் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பூபாலனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் பூபாலன் மனைவியை தாக்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட தங்கப்பிரியா தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிசிக்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், தனது மனைவியை கொடுமைப்படுத்தியது குறித்து பூபாலன் தொலைபேசியில் அவரது தங்கையிடம் பேசி பகிர்ந்த ஆடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் தங்கப்பிரியாவின் பெற்றோர் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், "தனது மகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இப்புகாரின் அடிப்படையில் கணவர் பூபாலன், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஆய்வாளராக பணியாற்றும் அவரது பூபாலனின் தந்தை செந்தில்குமரன், தாய் விஜயா, தங்கை அனிதா ஆகியோர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கணவர் பூபாலன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகினர். தொடர்ந்து ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. பாலசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் பூபாலனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்