குற்றம் சாட்டியவர்களையே அரசு பணிநீக்கம் செய்வது கண்டனத்திற்குரியது - நயினார் நாகேந்திரன்

பொதுமக்களுக்காக மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட காவலர்களுக்காகவும் நாங்கள் களத்தில் இறங்கிப் போராடத் தயங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-18 21:07 IST

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சுந்தரேசன், நேர்மையான வழியில் பணியாற்றியதன் விளைவாக சில தினங்களுக்கு முன்பு அரசு வாகனமின்றி சாலையில் நடந்து செல்லும் காணொளி வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுகவின் அலங்கோல ஆட்சிக்கு அழிவு நெருங்கிவிட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

மாநில உரிமைகள் ஆணையத்தில் பணியாற்றுகையில் தமிழகத்தில் நிகழும் காவல்துறை மரணங்கள் குறித்தும், அதில் பல உயர் காவல் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விரிவான அறிக்கை அளித்த சுந்தரேசனை, மாநில உரிமைகள் ஆணையரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மணிக்குமாரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் திமுக அரசு எதற்காக மயிலாடுதுறைக்கு பணி மாற்றம் செய்தது? நேர்மையானவர்களுக்கு திமுக அரசில் என்ன வேலை என்பதற்காகவா?

மயிலாடுதுறைக்கு மாற்றலாகி வந்த பிறகு கடந்த ஒன்பது மாதங்களில் சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் 1200 வழக்குகளை பதிவு செய்ததோடு, 700 நபர்களை கைதும் செய்திருப்பதாக சுந்தரேசன் கூறுவதைக் கேட்டால். இடம் மாறினாலும் அறம் மாறாது நேர்மையாகத் தான் அவர் பணியாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது. அப்படியிருக்கையில் அவரது அரசு வாகனம் எதற்காக பறிக்கப்பட வேண்டும்? உரிய பாதுகாப்பின்றி பயணிக்கும் சுந்தரேசனை எதிராளிகள் எப்படி வேண்டுமானாலும் பழி தீர்க்கலாம் என மறைமுகமாக உணர்த்துகிறதா திமுக அரசு?

மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின், மயிலாடுதுறை சிறப்பு ஆய்வாளர் பாலச்சந்திரன், ஐஜி செந்தில் வேலன், டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகியோர் மீது சுந்தரேசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறிய பிறகும், குறிப்பிட்ட அரசு அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித விசாரணையும் நடக்காததைப் பார்த்தால் தமிழகத்தில் நடப்பது அதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சிதான் என்பது ஊர்ஜிதமாகிறது. ஆக, திமுக ஆட்சியில் பொதுமக்களின் புகார்களுக்கும் மதிப்பில்லை. காவல்துறை அதிகாரிகளின் மனக் குமுறல்களுக்கும் மதிப்பில்லை.

அதிலும் குறிப்பாக, மயிலாடுதுறை சிறப்பு ஆய்வாளர் பாலச்சந்திரன் மணல் கொள்ளையர்களிடமும், சட்டவிரோத மது விற்பனையாளர்களிடமும் கையூட்டு பெற்றுக் கொண்டு நிறைய அப்பாவிகள் மீது பொய் வழக்கு போடுகிறார் என சுந்தரேசன் கூறுவதைக் கேட்டால். குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரே கடைந்தெடுத்த குற்றவாளிகளாக மாறி வருகின்றனரோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர்.

காவல்துறை உயர் அதிகாரிகளின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில் அளிக்காமல். இதுவரை சுந்தரேசன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளின் பட்டியலை வெளியிடுவது திமுக-வின் வழக்கமான மடைமாற்று அரசியல். பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளி கூண்டில் ஏற்றுவது திமுக-விற்கு கைவந்த கலை என்பது எங்களுக்கு தெரியும், ஆனால் அதிகாரம் படைத்த காவல்துறையினருக்கும் அதே கதி தான் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இத்தனை மன அழுத்தத்தில் வேலை செய்யும் காவல்துறையினர் பொதுமக்களை எப்படி கருணையுடன் அணுகுவார்கள்? அரசின் மீதுள்ள கோபத்தை எங்கு சென்று தணிப்பார்கள்? இதனால் உண்மையில் பாதிக்கப்படுவது யார்? என்பதை பற்றியெல்லாம் சிந்திக்காத ஒரு அரசு. ஆளத் தகுதியற்றது. மக்களைத் தேடிச் சென்று குறைகளைத் தீர்க்கும் நாடகத்தில் பங்கேற்பதை விட, தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை நிர்வாகத்தை செம்மைப்படுத்துவது தான் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் தலையாய கடமை.

அதே சமயம் சுந்தரேசன் குறிப்பிட்ட அதிகாரிகள் மீது முறையான விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும், எவ்வித சமரசமுமின்றி அவ்விசாரணை நடைபெற்று முடிவுகள் மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் திமுக அரசின் நிர்வாக லட்சணத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சுந்தரேசன் மீதான இடைக்கால பணிநீக்க ஆணையைத் திரும்பப் பெறுவதோடு, அவர் எவ்வித இடையூறுமின்றி நிம்மதியாக தன் பணியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளையும் முதல்-அமைச்சர் செய்துதர வேண்டும்.

இல்லையேல் தமிழக பாஜக சார்பாக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படும். பொதுமக்களுக்காக மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட காவலர்களுக்காகவும் நாங்கள் களத்தில் இறங்கிப் போராடத் தயங்க மாட்டோம் என்பதை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்