திமுக செய்யும் தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தை: எடப்பாடி பழனிசாமி

ஒரு முறை ஏமாந்து விட்டீர்கள் மீண்டும் ஏமாறாதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.;

Update:2025-07-18 19:57 IST

திருவாரூர்,

'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருவாரூர், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.நன்னிலத்தில் பரப்புரை மேற்கொள்வதற்காக வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, பேருந்தில் இருந்து இறங்கி மாட்டு வண்டி ஓட்டினார்.

தொடர்ந்து பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

திமுகவில் உறுப்பினர்கள் குறைந்து விட்டார்கள். அதனால் தான் ஓரணியில் தமிழ்நாடு என்று வீடு வீடாக வந்து சந்தித்து வருகிறார்கள். யாரும் ஏமாந்து விடாதீர்கள். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் ஆசையை தூண்ட வேண்டும். ஒரு முறை ஏமாந்து விட்டீர்கள் மீண்டும் ஏமாறாதீர்கள்.

50 ஆண்டுகளாக காவேரி பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் தீர்ப்பு பெற்றுத் தந்த அரசாங்கம் அதிமுக அரசு. திமுக செய்யும் தவறுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் உடந்தையாக உள்ளன. திமுகவிடம் எப்போது கை நீட்டி பணம் வாங்கினீர்களோ, அப்போதே கம்யூனிஸ்ட் கட்சி முடிந்துவிட்டது. திமுகவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்தது வேதனை அளிக்கிறது. மக்கள் பிரச்னைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன.

மக்கள் பிரச்சினைகளை கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில்லை. வரலாறு படைத்த கம்யூனிஸ்ட் இயக்கம் மாசுபட்டுவிடக்கூடாது என நல்லெண்ணத்தில் சொல்கிறேன். உங்களை குறை சொல்லி நாங்கள் கட்சி வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்காக உழைத்த கட்சி இன்று தேய்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்