உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சிக்கோட்டை அறிவிப்பு: அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
செஞ்சிக்கோட்டை கடந்த 11-ந் தேதி உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.;
விழுப்புரம்,
கட்டிடக்கலையில் சிறந்து விளங்கும் செஞ்சிக்கோட்டையை பார்த்து ரசிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் செஞ்சிக்கோட்டை கடந்த 11-ந் தேதி உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக செஞ்சிக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாக தமிழக முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் ஜடக்சிரு நேற்று செஞ்சிக்கோட்டையில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த தாசில்தார் அலுவலகம் கட்ட உள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் செஞ்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அதிகாரி, அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து மேல்மலையனூர் அருகே சிறுவாடி- அலம்பூண்டி இடையே ரூ.5 கோடியே 73 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணியை பார்வையிட்டதோடு பணியை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என அங்கிருந்த அலுவலர்களிடம் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் பத்மஜா, பயிற்சி கலெக்டர் வெங்கடேஷ்வரன், ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன், பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், மண்டல போக்குவரத்து அலுவலர் பட்டாபி, தாசில்தார் துரைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், பிரபா சங்கர், தொல்லியல் ஆர்வலர் ஆசிரியர் முனுசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.