நீலகிரி: வாழைக்கன்றுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் - விவசாயிகள் கவலை

ஒருபுறம் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் நிலையில், மறுபுறம் புலிகள் கால்நடைகளை தாக்குகின்றன.;

Update:2025-07-18 23:40 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பக எல்லையோர கிராமங்களான கூடலூர் தொரப்பள்ளி, புத்தூர் வயல், தேன் வயல், ஏச்சம் வயல், மாக்க மூலா, தேவர் சோலை பேரூராட்சி பகுதிகளில் காட்டு யானைகள் கடந்த 2 மாதங்களாக தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அவற்றை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டாலும், வனப்பகுதிக்குள் செல்ல மறுத்து ஊருக்குள் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் நிம்மதி இழந்துள்ளனர். முதுமலை எல்லையோர கிராமங்களில் இரவு நுழையும் காட்டு யானைகள் வாழைகள், பாக்கு, தென்னை மரங்கள், விவசாய பயிர்களை தினமும் தின்று சேதப்படுத்துகிறது.

பயிர்கள்... கால்நடைகளை தாக்குதல்

நேற்று புத்தூர் வயலை சேர்ந்த சங்கரன் என்பவரது விளைநிலத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் வாழைக்கன்றுகளை மிதித்து துவம்சம் செய்தது. அதே பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழைகள் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. இதேபோல் தேவர்சோலை, பாடந்தொரை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன.

பாடந்தொரை அருகே கணியம் வயல் பகுதியை சேர்ந்த அசைனார் என்பவர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். நேற்று மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை காணாமல், பல இடங்களில் தேடினார். அப்போது அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் புலி கடித்து தின்ற பசு மாட்டின் உடற்பாகங்கள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று அசைனாரின் எருமை மாட்டை புலி கடித்தது. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது உடல் முழுவதும் புலியின் பற்கள் மற்றும் நகங்கள் பதிவான காயங்கள் தென்பட்டது. இதைத்தொடர்ந்து மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே மாடு உயிரிழந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கால்நடைகளை கடித்து கொன்று வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள், விவசாயிகள் கூறும்போது, வனவிலங்குகள் தாக்கி விவசாய பயிர்கள் சேதம் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு போன்ற காரணங்களுக்கு சேதத்துக்கு ஏற்ப வனத்துறையினர் இழப்பீடு தொகை வழங்குவதில்லை. காட்டு யானைகள் விவசாய பயிர்களையும், புலிகள் கால்நடைகளையும் தாக்கும் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

,

 

Tags:    

மேலும் செய்திகள்