புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் - கே.என். நேரு நேரில் ஆய்வு
பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி மேம்பாலப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களை அறிவுறுத்தி உள்ளார்.;
சென்னை,
அமைச்சர் கே.என்.நேரு ரூ.164.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியினை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-133 மற்றும் வார்டு-141 க்குட்பட்ட தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.164.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலப் பணியினை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
அப்போது பொது மக்களுக்கும் - போக்குவரத்திற்கும் இடையூறின்றி மேம்பாலப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களை அறிவுறுத்தினேன்.
இந்த ஆய்வின்போது, மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.