மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு?
எனது அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்கிறார்கள் என்று டி.எஸ்.பி. சுந்தரேசன் கூறியிருந்தார்.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். இவர் அலுவலகத்துக்கு நடந்து செல்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. அவரது அலுவலக வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வி.ஐ.பி. பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு பழுதடைந்த வாகனத்தை அவருக்கு கொடுத்ததாகவும் அந்த வாகனம் தனக்கு தேவையில்லை என்று ஒப்படைத்துவிட்டு பணிகளை கவனிக்க வீட்டில் இருந்து நடந்து வந்ததாகவும் வீடியோ வைரல் ஆனது.
இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள். எனது அலுவலக வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக என்னை சித்ரவதை செய்கிறார்கள்.
நான் லஞ்சம் வாங்கியதாக நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார். எனது உயிர் முக்கியம் இல்லை. லஞ்சம், ஊழல் இவற்றில் இருக்கும் அதிகாரிகளுக்கு வசூல் செய்யாத நேர்மையான போலீசார் பழிவாங்கப்படுவார்கள். நான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் 'சஸ்பெண்டு' செய்யப்படுவேன் என்றும் தெரிந்துதான், இந்த பேட்டி அளிக்கிறேன்" என்று கூறினார்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய வாகனத்தை எஸ்.பி. அலுவலகத்தினர் வாங்கிக் கொண்டதாக மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி அளித்த நிலையில், தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று காலை மயிலாடுதுறை எஸ்.பி.அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்.