ஆசிரியர்கள் குற்றவாளிகளைப் போல கைது செய்யப்படும் கொடுமை - ஆதவ் அர்ஜுனா கண்டனம்
பல வாக்குறுதியாகளை கொடுத்தே, 2021-ல் ஆட்சிக்கு வந்தது தி.மு.க. ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற மட்டும் ஏனோ அவர்களுக்குக் கசக்கிறது என தெரிவித்துள்ளார்.;
சென்னை,
த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
'கல்விமுறையின் பாதுகாவலர்கள் நாங்கள்' என வாய்கூசாமல் மேடைக்கு மேடை முழங்குகிறார் தமிழ்நாடு முதல்-அமைச்சர். பக்கம் பக்கமாய் விளம்பரம் கொடுத்துபிரச்சாரம் செய்கிறது அவரின் விளம்பர மாடல் அரசு. ஆனால், முதல்-அமைச்சரின் முழக்கங்கள் ஒலிக்கும் அதே தெருக்களில் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வரும் ஆசிரியப்பெருமக்களின் போராட்டக் குரலும் ஒலிக்கிறது. 'நாடு போற்றும் நான்காண்டு சாதனை' என அவர் கட்சி விளம்பரம் செய்யும் அதே நாளிதழ்களில்தான் நித்தமும் போராடும் ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் போன்ற ஆசிரியர் அமைப்புகளின் கோரிக்கைகள் குறித்த செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. இதையெல்லாம் முதல்-அமைச்சர் கண்டுகொள்ளாமல் இருக்கக் காரணம் அவரின் மெத்தனமா? இல்லை, பிரச்சினையின் தீவிரம் குறித்து முதல்-அமைச்சர் அறியாதவகையில் தடுக்கும் சிலரின் சதியா?
இத்தனைக்கும், போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில், 'பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம்' என்பதை 181-வது தேர்தல் வாக்குறுதியாகவும், 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்பதை 309-வது தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்தே, 2021-ல் ஆட்சிக்கு வந்தது தி.மு.க. ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற மட்டும் ஏனோ அவர்களுக்குக் கசக்கிறது. அதைக் கேள்வி கேட்பவர்கள் முரட்டுத்தனமாய் கைது செய்யப்படுகிறார்கள். 'சொன்னசொல் தவறமாட்டோம்' என நீங்கள் போடும் வெற்று நாடகம் இனியும் மக்களிடையே எடுபடாது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம்' என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு, அந்நோக்கத்தின் தொடக்கப்புள்ளியான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களையே குறிவைத்து 21.12.2023 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டது. அதுநாள்வரை இருந்த ஆரம்பப் பள்ளி கட்டமைப்புகளையே அடித்து நொறுக்கும் வகையிலான அரசாணை அது. அதற்கு முன்புவரை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு என்பது அந்தந்த ஒன்றிய அளவில் பணிபுரிபவர்களுக்குள் பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. பணியிட மாறுதலும் அந்தந்த ஒன்றியத்திற்குள்ளேயே நடந்து வந்தது.
ஆனால், தி.மு.க அரசு வெளியிட்ட அரசாணை எண் 243-ன் படி, ஒன்றிய முன்னுரிமை என்பது மாநில முன்னுரிமையாக மாற்றப்பட்டது. இதனால், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மாநில அளவில் பணியிட மாற்றம் என எங்கு வேண்டுமென்றாலும் தூக்கியடிக்கப்படலாம்.
பெரும்பாலான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பெண்கள். அவர்களால் எப்படி தங்கள் சொந்த ஊரிலுள்ள குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து வெகுதூரத்தில் இருக்கும் ஊரில் தங்கி பணியாற்ற முடியும்? 'பதவி உயர்வு தந்தால், கூடவே இப்படி பணியிட மாற்றமும் செய்வார்கள்' எனக் கருதி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வே வேண்டாம் என எழுதிக்கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஒன்றிய அளவிலான பணி மூப்புப் பட்டியல் இந்த அரசாணை மூலம் மாநில அளவிலான பணி மூப்புப் பட்டியலாக மாற்றப்பட்டிருப்பதால் பதவி உயர்வு பெறுவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். இப்படி தங்களின் வாழ்வாதாரம் அத்தனையையும் பாதிக்கும் அரசாணையை எதிர்த்துதான் போராடி வருகிறார்கள் ஆசிரியர்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனைக் குரலை காது கொடுத்துக் கேட்காமல் அவர்களின்மேல் மாநிலம் முழுவதும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகிறது ஆளும் தி.மு.க அரசு.
ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்ப தி.மு.க அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. இப்போது பணியில் இருப்பவர்களும் தங்களின் நியாயமானக் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கியிருப்பதால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை உருவாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கல்வியே சமூக விடுதலைக்கான ஆயுதம். அக்கல்வியைப் போதிக்கும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததும் அவர்களைத் தொடர்ந்து கைது செய்வதும் ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையே சிதைத்துவிடும். எனவே இனியும் காலம் தாழ்த்தாது ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் போன்ற ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை தி.மு.க அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் இதற்கான விலையை வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின்பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.