தெரு நாய்களால் ஏற்படும் நோய் பரவலைத் தடுக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி
கேரள அரசின் முன்மாதிரியைப் பின்பற்றி தெரு நாய்களால் ஏற்படும் தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.;
சென்னை,
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களிடையே கடும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. நாய்க்கடி சம்பவங்கள், ரேபிஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள், சாலை விபத்துகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3.3 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பரவலாக உள்ள இப்பிரச்சினை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களை அதிகம் பாதிக்கிறது.
ரேபிஸ் 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோயாகும். தெரு நாய்களின் கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும், தடுப்பூசி இல்லாத நிலையும் இதனை மேலும் தீவிரப்படுத்துகின்றன. தெரு நாய்கள் சாலைகளில் திடீரென புகுந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தனியாக நடமாடும் முதியவர்கள், பெண்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலை முடிந்து திரும்பும் தொழிலாளர்கள் நாய்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன, இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், கேரள அரசு, நோய் பரப்பும் மற்றும் ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மனிதாபிமான நடவடிக்கை மனித உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினைகள் தமிழகத்தில் பொது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கு பெரும் சவாலாக உள்ளன. மனிதாபிமான அணுகுமுறையுடன் உறுதியான நடவடிக்கைகள் அவசியம். கேரள அரசின் முன்மாதிரியைப் பின்பற்றி, தமிழக அரசு இப்பிரச்சினையை அவசரகால அடிப்படையில் அணுகுவதன் மூலம் மக்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க முடியும்.
ஆகவே, நோய் பரப்பும், தாக்குதல் நடத்தும் மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரு நாய்களை அடையாளம் கண்டு, விலங்கு நல விதிமுறைகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.