159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை- உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்க ஏற்பாடு செய்வதாக குடியிருப்புவாசிகளிடம் துணை முதல்-அமைச்சர் உறுதி அளித்தார்.;

Update:2025-07-18 14:47 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (18.7.2025) முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பிற்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேசின் பாலம் சாலையில் அமைந்துள்ள பால்டிப்போ பகுதியில் தண்டையார்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 60 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 159 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 75 வருடங்களாக மாட்டு கொட்டகை அமைத்து பால் வியாபாரம் செய்து இவ்விடத்திலேயே வசித்து வந்தனர்.

இந்த இடமானது தாழ்வான பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து 159 குடும்பங்களும் மிகுந்த பாதிப்படைவதால் இவர்களை மறுகுடியமர்வு அமர்த்த வேண்டி இருந்தது. 2024 ஆம் ஆண்டு மழைக்காலத்தில், வெள்ள நீரினால் சூழப்பட்ட இந்த பகுதியை பார்வையிட்ட துணை முதல்-அமைச்சர், 159 குடும்பங்களுக்கும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்க ஏற்பாடு செய்வதாக குடியிருப்புவாசிகளிடம் உறுதி அளித்தார்.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, இந்த 159 குடும்பத்தினருக்கும் மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மறுகுடியமர்வு செய்ய ஆணைகள் தயார் செய்யப்பட்டன.

இன்று (18.7.2025) துணை முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பிற்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஆர்.மூர்த்தி, வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (நகரமைப்பு) தா.இளைய அருணா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் ஸ்ரேயா பி. சிங், வடக்கு வட்டார ஆணையாளர் கட்டா ரவி தேஜா. இணை மேலாண்மை இயக்குநர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் பா.வேளாங்கண்ணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், பயனாளிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்