பர்வதமலைக்கு சென்றபோது சோகம்... கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

பர்வதமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.;

Update:2025-07-18 13:59 IST

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென்மாதிமங்கலம் பகுதியில் சுமார் 4,560 அடி உயரம் கொண்ட பர்வதமலை மீது மல்லிகார்ஜூனேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாத பவுர்ணமி நாட்களிலும் மற்றும் வார விடுமுறை நாட்களிலும் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு பெல்லாரி தேவி நகரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (21 வயது). இவர் பெங்களூருவில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் பர்வதமலைக்கு வந்து மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மலையில் இருந்து கீழே இறங்கி வரும் வழியில் திடீரென மனோஜ்குமாருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

உடனடியாக அவரை உள்ளூரை சேர்ந்தவர்கள் டோலி கட்டி கீழே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கலசபாக்கம் அரசு துணை மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடலாடி போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்