கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி

மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள், மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2025-07-18 10:23 IST

கோப்புப்படம் 

நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாக்கோவில் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் திருவாரூர் மாவட்டம் கம்பர் தெருவைச் சேர்ந்த சபரீஸ்வரன் (23 வயது), பிசியோதெரபி பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வகுப்பறையில் இருந்த சபரீஸ்வரன், கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்த பேராசிரியர்கள் மாணவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபரீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவர் சபரீஸ்வரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவரின் உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் நேற்று கல்லூரிக்கு திரண்டு வந்தனர்.

கல்லூரி வாசலில் இரும்பு தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் உறவினர்கள் மற்றும் மாணவர் சங்கத்தினர், நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகை உதவி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்