விஜய் தலைமையில் நாளை மறுநாள் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெறுகிறது.;
கோப்புப்படம்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கூடினர். இது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கட்சி கட்டமைப்பு பணிகளில் விஜய் தீவிரமாக இறங்கினார்.
நகரம் தொடங்கி கிராமம் வரை கட்சிக்கு அனைத்து நிலை நிர்வாகிகளையும் த.வெ.க. நியமித்து முடித்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. ஆயத்தமாகி வருகிறது. இதனிடையெ தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விஜய் தலைமையில் கடந்த 4-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று விஜய் திட்டவட்டமாக அறிவித்தார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆகஸ்ட் மாதம் 3-வது வாரத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, மற்றொரு மாநில மாநாட்டை நடத்துவதற்கும் இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் த.வெ.க. 2-வது மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 25-ம் தேதி மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளான்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. மாநாட்டு திடல் 506 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. பிரமாண்டமாக மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை 5 மணி அளவில் பூமி பூஜை நடந்தது. அப்போது, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இந்த நிலையில் விஜய் தலைமையில் நாளை மறுநாள் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இரண்டாவது மாநில மாநாடு, சட்டசபை தேர்தல் தொடர்பான வியூகங்கள் அமைப்பது மற்றும் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள், மாநாட்டுக்கு வருபவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.