'ரீல்ஸ்' மோகத்தால் விபரீதம்: கொடிய விஷமுள்ள நாகத்தை கழுத்தில் போட்டு சுற்றியவருக்கு நேர்ந்த சோகம்
கொடிய விஷமுள்ள அந்த நாகப்பாம்பை அவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார்.;
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் குணால் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் மஹாவர் (வயது 42). பாம்புபிடி வீரரான இவர், பல்வேறு பகுதிகளில் பாம்புகளை பிடித்த அனுபவம் உள்ளவர்.
இந்தநிலையில் பர்பத்புரா கிராமத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதை பிடிக்குமாறும் தீபக் மஹாவருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர், அந்த விஷப்பாம்பை லாவகமாக பிடித்தார்.
அப்போது பள்ளியில் படிக்கும் அவருடைய மகனை அழைத்துவருமாறு அவருக்கு வீட்டில் இருந்து போன் வந்தது. இதையடுத்து கொடிய விஷமுள்ள அந்த நாகப்பாம்பை அவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். வழியில் தனது கழுத்தில் பாம்பு கிடப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதனை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டார்.
கழுத்தில் பாம்புடன், மகனை அழைத்துக்கொண்டு வரும் வழியில் தீபக் மஹாவரின் கையில் அந்த பாம்பு கடித்துவிட்டது. இதில் அவரது உடலில் விஷம் ஏறியது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தீபக் மஹாவர் பரிதாபமாக செத்தார்.
இந்தநிலையில் தீபக் மஹாவர், விஷப்பாம்பை கழுத்தில்போட்டு சுற்றிய ரீல்ஸ் வெளியாகி வைரலாகி உள்ளது.