பிளஸ்-1 மாணவனிடம் பாலியல் அத்துமீறல்.. 3 மாணவர்கள் மீது போக்சோ வழக்கு
பிளஸ்-1 மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பிளஸ்-2 வரை வகுப்புகள் நடந்து வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கு, அங்கு பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் சேர்ந்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பிளஸ்-1 மாணவன் இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 3 மாணவர்களில் 2 பேரை கைது செய்தனர்.
பின்னர், இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.