வந்தே பாரத் ரெயில்களின் முன்பதிவு முறையில் புதிய வசதி
வந்தேபாரத் ரெயில்களில் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.;
சென்னை,
தெற்கு ரெயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்தவகையில், குறிப்பிட்ட சில வந்தேபாரத் ரெயில்களில் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வந்தேபாரத் விரைவு ரெயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு காலியிடம் இருப்பது தெரிவிக்கப்படும். அதில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய நடப்பு முன்பதிவு வசதியானது குறிப்பிட்ட 8 வந்தே பாரத் விரைவு ரெயில்களில் மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மங்களூரு சென்டிரல்- திருவனந்தபுரம் சென்டிரல் (வண்டி எண். 20631), திருவனந்தபுரம் சென்டிரல்-மங்களூரு சென்டிரல் (20632), சென்னை எழும்பூர்- நாகர்கோவில் (20627), நாகர்கோவில்- சென்னை எழும்பூர் (206628) கோயம்புத்தூர்-பெங்களூரு கண்டோன்மென்ட் (20642), மங்களூரு சென்டிரல்- மட்காவ் (20646), மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் (20671), சென்னை சென்டிரல்-விஜயவாடா (20677) ஆகிய 8 வந்தே பாரத் ரெயில்களிலும் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.