மேம்பாலத்தின் மீது பைக்கில் சென்றபோது விபத்து - 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழப்பு
மேடவாக்கம் மேம்பாலத்தின் மீது பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார்.;
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பெரியார் நகர் கவிமணி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25 வயது). இவர் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் தன்னுடன் பணியாற்றும் நண்பர்களை மேடவாக்கம் கூட்ரோட்டில் சந்தித்து விட்டு பள்ளிக்கரணை நோக்கி சென்று கொண்டிருந்தார். மேடவாக்கம் மேம்பாலத்தின் மீது சென்றபோது பாலத்தின் திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் சுமார் 60 அடி உயர மேம்பாலத்தில் இருந்து சாலையில் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் அருகே விழுந்தார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில்தான் மணிகண்டனின் தந்தை நடேசன் இறந்துள்ளார். இந்த நிலையில் மணிகண்டன் விபத்தில் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.