குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு; 3 பேர் கைது
3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
திருவாரூர்,
திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த பள்ளியில் பள்ளி வாளகத்தில் இருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு, அதில் மனித கழிவு கலக்கப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவத்தைபோன்று நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்தநிலையில் திருவாரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ்(வயது36), செந்தில்(39), காளிதாஸ்(27) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் 3 பேரும் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மது அருந்தியுள்ளனர். மேலும் சத்துணவு மையத்துக்குள் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, அங்கு அடுப்பு வைத்து அசைவ உணவினை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில் இயற்கை உபாதை ஏற்பட்டு தண்ணீருக்காக குடிநீர் தொட்டியை உடைத்து அதில் இருந்த தண்ணீரை பயன்படுத்திய போது தண்ணீரில் மனித கழிவு கலந்து உள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.