திருநெல்வேலி: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் இதுவரை 2 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.;
கடந்த 2011-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை சேர்ந்த சரவணன்(எ) கோபி (46 தற்போதைய வயது) என்பவர் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சுத்தமல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சுத்தமல்லி காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணன்(எ) கோபியை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசரணை திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றம்) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்ட சரவணன்(எ) கோபிக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி ஹேமா தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் சரவணனுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததற்கு இந்திய தண்டனை சட்டம் 376ன்படி 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST ACT) பிரிவு 3 (2) (v)-ன்படி 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1) (xii)-ன்படி ஒரு ஆண்டு சறை தண்டனை, ரூ.1,000 அபராதம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 417ன்படி ஒரு வருட சாதாரண சிறை தண்டனை விதித்து, மேற்சொன்ன சிறை தண்டனையினை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் (தற்போது ஒய்வு) மற்றும் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. சத்யராஜ் மற்றும் சுத்தமல்லி காவல் நிலைய அலுவலர்களையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் கந்தசாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டில் இதுவரை 2 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.